சிகப்பு ரோஜா ஒன்றாம் அத்தியாயம்

11 Jul 2021 Admin

ஏர்போர்ட் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் துணியால் நெய்த சிகப்பு ரோஜா பூ கொண்ட வெள்ளை முகக்கவசம் அணிந்து கொண்டு திவ்யா சிகப்பு கலர் அமெரிக்கன் டூரிஸ்ட்டர் பெட்டியை உருட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள். செக்யூரிட்டி கதவை அவள் கடக்க முயல அங்கு நின்றுருந்த செக்யூரிட்டி வேலன் அவளை பார்த்து பெட்டியை எடுத்து செக்யூரிட்டி கேபினில் வைக்குமாறு கூறுகின்றார். தனது தவறை உணர்ந்து திவ்யா "சாரி" என்று கூறி பெட்டியை உருட்டிக்கொண்டு கேபினை நோக்கி நடந்தாள்.  கேபின் மீது பெட்டியை தூக்கி வைக்க முடியாமல் திவ்யா கஷ்டப்பட, ஒரு கை அங்கே திவ்யாவிற்கு உதவுகின்றது. ரகுலன் அவளுக்கு பெட்டியை கேபினில் தூக்கிவைத்து உதவுகின்றான். திவ்யாவை முகக்கவசத்தில் இருக்கும் ராகுலனை பார்த்து "தேங்க்ஸ்" என்று கூற பதிலுக்கு முகக்கவசத்துடன் புன்முறுவுகின்றான் ரகுலன். இருவரும் வேறுவேறு செக்யூரிட்டி வரிசைக்கு செல்கின்றனர். ரகுலன் திவ்யாவை பார்த்தவாறே நிற்கின்றான். திவ்யாவும் திரும்பி ரகுலனை பார்த்து புன்முறுவுகின்றாள். முகக்கவசத்துடன் புன்முறுவும் போது அவள் கன்னங்கள் விரிந்து கண்கள் சுருங்குவது ரகுலனுக்கு நன்றாகவே தெரிகின்றது. 

கேபினின் மறுமுனையில் திவ்யா பெட்டியை எடுக்க கஷ்டப்பட, ரகுலன் சிரித்தவாறு வந்து பெட்டியை எடுத்து கொடுக்க திவ்யா சிரித்துக்கொண்டே "தேங்க்ஸ் அகேன்" என்று சொல்ல ரகுலன் சிரித்துக்கொண்டே தலையசைத்து கட்டை விரலை உயர்த்தி காட்டி எஸ்கலேட்டர் நோக்கி நடக்கின்றான். திவ்யா ரகுலனை பின்தொடர்ந்து வர ரகுலன் எதுவும் உதவி வேண்டுமோ என்ற எண்ணத்தில் திரும்பி நிற்க, திவ்யா "வாஷேர்மன்பெட்டுக்கு எந்த பிளாட்பார்ம் எடுக்கணும்?" ரகுலன் பிளாட்பார்ம் 1-ஐ பார்த்து கை காட்டுகின்றான். திவ்யா பிளாட்பார்ம் 1-ஐ நோக்கி நடக்கின்றாள். ரகுலன் அவளை பின்தொடர திவ்யா திரும்பி பார்க்கின்றாள். ரகுலன் முதல் முறையாக வாய் திறந்து "நானும் வாஷேர்மன்பெட் தான் போறேன்! வாங்க கைடு பண்றேன்!" என்று சொல்ல திவ்யா முகத்தில் ஒரு சந்தோசம் தெரிந்தது. ரகுலன் அதை பார்த்து ரசித்தான். 

திவ்யா தான் மும்பையிலிருந்து வந்திருப்பதாகவும் இங்கு IT Accumens கம்பெனியில் புதிதாக மாறி வந்திருப்பதாகவும் கூறுகின்றாள். இதை கேட்டு ரகுலன் எந்த ஒரு ஈடுபாடு இல்லாமல் மௌனமாய் நிற்க, திவ்யா "நீங்க என்ன பண்றீங்க?" ரகுலன் தடுமாறியபடி "ஒரு படம் டைரக்ட் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன்!" திவ்யா "ஓ வாவ்! கூல்! செம்ம! ஐ லவ் மூவிஸ்! ஷார்ட் பிலிம்ஸ் ஏதாவது பண்ணி இருக்கீங்களா? யூ டியூப்ல இருக்கா?" அவளது தொடர் கேள்விகள் ரகுலனை திணறடித்தது, ரகுலன் "இருக்கு பட் அது ஓகே வா தான் இருக்கும் நாட் சம்திங் கிரேட்!" அதற்கு சிரித்துக்கொண்டு திவ்யா "அதை நாங்க சொல்லணும்!" என்று சொல்ல ரகுலன் ஷார்ட் பிலிம்மின் பெயரை சொல்கின்றான். படத்தின் பெயர் கேட்டு அவளது கண்கள் பெரிதாக விரிகின்றது, திவ்யா விரிந்த கண்களுடன் "நான் உங்க படத்தை டெல்லி பிலிம் பெஸ்டிவல்ல பார்த்து இருக்கேன்! யு நோ, உங்களுக்கு ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தாங்க தெரியுமா! டைரக்டர் வரலன்னு வேற படத்துக்கு அவார்ட் கொடுத்துட்டாங்க. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆடிட்டர் ஸ்டேஜ்ல பேசும்போது உங்க படத்தை மென்ஷன் பண்ணி மோஸ்ட் அண்டர் ரேட்டெட் பிலிம்ன்னு சொன்னாங்க, ஆமாம் ஏன் நீங்க வரல?" என்று அவள் படபடவென்று கேட்க, மெட்ரோ ரயில் வேகமாக அவர்கள் நிற்கும் பிளாட்பார்மை நோக்கி வந்து கொண்டிருந்தது.      

இருவரும் ரயிலில் ஏறி அமர்கின்றனர். ரகுலன் இருவர் அமரக்கூடிய நீல நிறமுள்ள பிளாஸ்டிக் இருக்கையில் அமருகின்றான். திவ்யா ரகுலன் எதிரே அதே போன்ற இருவர் அமரக்கூடிய இருக்கையில் அமருகின்றாள். ரகுலன் அமைதியாய் திவ்யாவை பார்த்துக்கொண்டு இருக்க திவ்யா புருவத்தை உயர்த்தி கையை விரித்து நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே என்பது போல கேட்டாள். சாய்ந்து உட்கார்ந்திருந்த ரகுலன் முன்னே வந்து "டெல்லி வரை வர அப்போ கைல காசு இல்ல வரல! இது வரைக்கும் அங்க என்ன நடந்ததுன்னு கூட எனக்கு தெரியாது, யாருமே சொல்லலே! சொல்றதுக்கு அங்க யாருமே போகலேயே!! 5 வருஷம் முன்னாடி நடந்த விஷயம்! நீங்க சொல்லித்தான் அங்க இவ்வளவு நடந்ததே எனக்கு தெரியும்! ஸ்டாண்டிங் ஓவேஷன்! அவார்ட்ஸ்! இதெல்லாம் என்ன மாதிரி ஒருத்தனுக்கு கிடைச்சுதுன்னு நினைச்சா!!" என்று ரகுலன் சொல்ல அவன் கண்கள் ஈரமாகியது, "இத நான் யார்கிட்டயாவது சொன்னாலும், யாரும் நம்பமாட்டாங்க! இதுக்கும் சேர்த்து என்னை கலாய்ப்பாங்க!!" என்று சொன்னவுடன் ரகுலன் குரல் உடைந்தது. திவ்யா ஆறுதலாய் ரகுலன் கையை பிடித்து சமாதானம் செய்தாள். ரயில் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. கூட்டம் முட்டி மோதி ஏறியது, கூட்டத்தை பார்த்த திவ்யா எதிர் இருக்கையிலிருந்து ரகுலன் இருக்கையில் அவன் அருகில் வந்து அமருகின்றாள். திவ்யா கண்களில் ரகுலன் மீது ஒரு வித பாசம் தெரிய தொடங்கியது. திவ்யா கேட்க, இருவரும் தொலைபேசி என்னை பரிமாறிக் கொள்கின்றனர். திவ்யா வாட்ஸப்பில் "ஹாய்" என்று உடனே அனுப்ப, ரகுலன் அந்த என்னை போனில் சேவ் செய்து கொள்கின்றான்.

கூட்டம் அதிகமாக நெருக்கம் இவர்களை மேலும் நெறுக்குக்கின்றது. அப்பொழுது ரகுலனின் போன் ஒலிக்கின்றது, அவன் பாக்கெட்டிலிருந்து போனை எடுக்கும் பொழுது அதில் பொண்டாட்டி கால்லிங் என்று இருப்பதை திவ்யா இதேர்ச்சையாக படிக்கின்றாள். ரகுலன் கல்யாணம் ஆனவன் என்பது திவ்யாவிற்கு சற்று ஏமாற்றத்தை தருகின்றது. ரகுலன் போனை எடுத்து "ஹலோ ஹலோ" என்று சொல்ல திவ்யா தனது பெட்டியை எடுத்துக்கொண்டு லேடீஸ் ஒன்லி கம்பார்ட்மென்ட் நோக்கி கூட்டத்தை விலக்கி நடக்கின்றாள். மறுமுனையில் பேச்சுக்குரல் கேட்காததால் போனை துண்டித்து ரகுலன் திவ்யா எங்கே ஏன் திடிரென்று எழுந்து செல்கின்றாள் என்று பார்த்துக்கொண்டிருக்க ஒரு தாத்தா அவன் அருகில் வந்து உட்காருகின்றார். மறுபடியும் தனது மனைவிக்கு போன் போட முயற்சிக்க ரயில் சுரங்கப்பாதைக்குள் செல்கின்றது. சிக்னல் கட் ஆகின்றது. ரகுலன் போனை பார்க்க அதில் சிக்னல் இல்லை. திவ்யாவை திரும்பவும் அவன் தேட அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும்  தெரியவில்லை.

அடுத்து ஸ்டாப் சென்ட்ரல் மெட்ரோ என்று ஒலிபெருக்கி ஒலிக்க, ரகுலன் வயிற்றில் சரக்கென்று ஏதோ ஒன்று குத்தியது போல உணருகின்றான். குனிந்து பார்த்தபொழுது ஒரு சிறிய மஞ்சள் நிற பிளாஸ்டிக் ஊசி குத்த பட்டிருப்பதை காண்கின்றான். என்ன என்று அதை எடுத்து பார்ப்பதற்குள் தலை சுற்றி இருக்கையிலிருந்து கீழே சாய பின்னாலிருந்து திவ்யா ஓடி வந்து ரகுலனை தாங்கி பிடிக்கின்றாள். தனது கையில் இருந்த சின்ன விஸ்கி பாட்டிலை திறந்து யாரும் காணாமல் ரகுலன் மீது ஊற்றுகின்றாள், "குடிக்காதீங்கன்னு சொன்ன எங்க கேக்குறீங்க? எப்போ பார்த்தாலும் நான் தான் அசிங்க பட வேண்டியதா இருக்கு!" என்று திவ்யா முணுமுணுக்க அருகில் உட்கார்ந்து இருந்த தாத்தா "இந்த காலத்து பசங்க எப்போ பார்த்தாலும் குடி குடின்னு இருக்கானுவ!! காலம் ரொம்ப கெட்டு போச்சு!" என்று வழக்கம் போல  உச்சு கொட்ட! ஒரு தோளில் ரகுலனை தாங்க மறு கையில் பெட்டியை உருட்டி சாதாரணமாக சென்ட்ரல்  நிறுத்தத்தில் ரகுலனை சுமந்தபடி வெளியேறுகின்றாள். அவள் பலம் அப்பொழுதுதான் புலப்பட்டது. ரகுலன் தடுமாறி தடுமாறி நடக்க இவள் ரகுலனை இழுத்துக்கொண்டு சென்ட்ரல் வாசலில் ஆட்டோவில் ஏற்றி நேரே லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்லுமாறு கூறுகின்றாள். ஆட்டோ சீறி பாய்கின்றது. போகும் வழியில் ரகுலனின் போனை திறந்து சிம் கார்டை எடுத்து உடைத்து வீசி எரிகின்றாள். ரகுலனின் பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை தேடி அதிலுள்ள ஐடி கார்டை தேடி எடுக்கின்றாள். பான் கார்டு ஆதார் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸை எடுத்து தனது கை பையில் வைத்துக்கொள்கின்றாள். ஆட்டோ டிரைவர் திவ்யா பாண்ட் பாக்கெட்டில் கை விடுவதை பார்த்து ஏதோ சில்மிஷம் செய்கின்றாள் என்று நினைத்து கண்ணாடியில் எட்டி பார்க்க திவ்யா அவரை பார்த்து முறைத்து "நேரா பார்த்து வண்டி ஓட்டுங்க!" என்று அவள் கோபமாக  சொல்ல, பயந்து ஆட்டோ டிரைவர் நேரே பார்த்து ஆட்டோவை ஓட்டுகின்றார். 

ஆட்டோவில் மயங்கிக்கிடந்திருந்த  ரகுலனை பார்த்து திவ்யா மனதில் "எனக்கு உன்ன புடிச்சு போச்சு ரகுலா!! இனி நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்! நீ யாரை வேணா கல்யாணம் பண்ணி இருக்கலாம் ஆனா இனி நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்!" என்று விஷமத்தனமாய் ரகுலனை பார்த்து சிரிக்கின்றாள்.  

மிருதுளா ரகுலனுக்கு போன் போட்டு கொண்டிருக்க மொபைல் சுவிட்ச் ஆப் என்று வருகின்றது. எரிச்சலில் போனை மேஜை மீது எரிய கான்ஸ்டபிள் சரவணன் அவள் அறையில் நுழைந்து "மேடம் டிஜி சார் உங்கள கூப்பிடறாரு" என்று சொல்ல மிருதுளா "2 மினிட்ஸ்ல வரேன்னு சொல்லுங்க" என்று சொல்லி அவளது போலீஸ் தொப்பியை மேஜையின் மேல் இருந்த எடுத்து மாட்டிக்கொண்டு கதவை திறந்து வெளியே செல்கின்றாள்.  கதவின் மீதுள்ள பெயர் பலகையில் "மிருதுளா ரகுலன் (ஐபிஸ்) - டேபியூட்டி கமிஷனர் ஆப் போலீஸ்" என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது.

தொடரும்...    

இந்த பொய் கதையை எழுதியது, 
சிவராஜ் பரமேஸ்வரன்.