பகற்கனவுகள்

04 Jan 2021 Admin

இணையத்தில் தொடர்ச்சியாக எழுதும் நபர் அல்ல நான், என் சார்ந்த எதையும் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளும்  நபரும் அல்ல, இந்த பதிவும் கூட பொதுநலன் கருதி எல்லாம் கிடையாது என் சுயநலம் என்றே வைத்துக்கொள்ளலாம்!
டிசம்பர், 2010-ல் நான் எடுத்த ஒரு முடிவிற்கே மீண்டும் 2020 டிசம்பரில் வந்திருக்கிறேன்...
நான் சினிமா எடுப்பேனா? அல்லது நான் சினிமாவில் என்ன தான் செய்கின்றேன்!? என்பதை தெளிவு படுத்துவதே இந்த பதிவு. (எனக்கு நானே) நேரம் இல்லாதவர்கள் இந்த பதிவை புறம்தள்ளி அவர்களது முக்கிய வேலையை பார்க்கவும். காரணம் இது கொஞ்சம் பெரிய பதிவு.
நான் 3650 நாட்களாக கண்ட பகற்கனவிலிருந்து எழுகிறேன். ஆம், அது கிட்டத்தட்ட பகல்கனவாகித்தான்போனது…
நான், சினிமாவில் இருந்து விலகுவதாக ஒரு முடிவுவிற்கு வந்துள்ளேன்.
இதை நான் எனது தோல்வியாக ஒப்புக்கொள்கிறேன்.. நீண்ட நெடிய யோசனையின் பின்பு முழுமனதும், அறிவும் அதையேதான் சொல்லவும் செய்கிறது.. காரணம் கடந்த 10 வருடங்களாக நான் நேசித்த சினிமாவின் மூலம் ஒருநயாபைசா கூட சம்பாதிக்க வில்லை! ஆனால் சம்பாதித்தை இழந்துள்ளேன், இதற்க்கு மேலும் இழக்க மனம் ல்லை.
என் தோல்விக்கு முக்கிய காரணம் எனது தலைக்கணமே, பாலுமகேந்திராவின் மாணவன் என்ற தலைக்கணம். நான் யாருடனும் துணை இயக்குனராக பணியாற்றவில்லை, இதற்கும் என் ஆசான் என்னை கண்டு கூறியசொற்களே காரணம்!
“You are now ready to direct your own movie, don’t waste your time start writing”.
அவர் ஏன் எதற்காக அப்படி சொன்னார் என்பது எனக்கு தெரியாது ஆனால் அந்த வார்த்தைகளை கேட்டபின்பு நான்யாரிடமும் துணை இயக்குனராக முயலவில்லை, நண்பர் ஒருவர் என்னை ஒருவரிடம் சேர்த்து விட்டார் ஆனால் என்னால் இருக்க முடியவில்லை… அரை நாளில் வேண்டாம் என்று உதறிய வாய்ப்புகளும் உண்டு. என் திமிர் என்னை திமிரச்செய்தது.
காலத்தின் கோலமாக பல தயாரிப்பாளர்களை சந்தித்தேன், ஒருவர் நெருங்கிய நண்பராகக்கூட ஆனார், ஆனால்வாய்ப்புதான் தரவில்லை. எனது கதையின் தேர்வும் ஒரு காரணமாக இருக்கலாம்! அவரை திருப்திப்படுத்த பலமுறைகதையை மாற்றியமைத்தேன், கதைகள் மாறினாலும் கதைக்களம் மாறினாலும் அவர் மட்டும் சம்மதம்சொல்லவில்லை. நான் திரும்பவும் தோற்றேன்.
நண்பர்கள் பலர் துணை இயக்குநர்களாக பணியாற்ற தொடங்கினர், அதில் ஒருவர் எனக்கு தயாரிப்பாளரை எப்படி அணுக வேண்டும் என்ற அறிவுரையை சொன்னார், அதை அப்படியே உங்களுக்கு சொல்கிறேன்..
"நீங்க சான்ஸ் தேடும் போது IT கம்பெனி போல சான்ஸ் தேட கூடாது, கேட் வாசலே போய் நிக்கணும்! கிட்டதட்டஒரு வாட்ச்மன் வேலை பார்க்கணும்! உங்க திறமை எல்லாம் இங்கே வேகாது, பிச்சை எடுக்கணும், குனிஞ்சு பணிவா பேசணும், ஆமாம் சாமீ போடணும்" என்று சொன்னார். மொத்தத்தில் தன்மானம் குறைவா இருக்கவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். தேடல் தொடர்ந்தது!
கோவையிலிருந்து ஒரு முறை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, பேசியவர் தன்னை தயாரிப்பாளர் என்று அறிமுகம் செய்துக்கொண்டார். மறைமுகமாக அல்லாமல் நேர்முகமாக என்னை மாமா வேலை பார்க்க சொன்னார் வந்த கோபத்தில் நான் திட்டிய வார்த்தைகளுக்கு கணக்கே இல்லை, கடைசியாக நீ என்றென்றைக்கும் இயக்குனராக மாட்டாய் என்று சாபம் விட்டார், சாபம் பலித்துவிட்டது என்று நினைக்கின்றேன்... (சிரிப்புடன் எழுதியது ) தேடல் தொடர்ந்தது!
மறுபடியும் எனது நண்பர் பிச்சை எடுத்தாவது உங்கள் கனவை நினைவாக்குங்கள்!! என்று கூறி சினிமாவில் சாதித்தவர்களெல்லாம் ஒரு முறை பிச்சை எடுத்தவர்களே என்று என்னை உணர்ச்சிவசப்பட செய்து என்னை வாசல்வாசலாகப் போய் தேட வைத்தார்! நான் ஒரு திமிர் பிடித்த அரக்கன் என்ற காரணத்தாலோ என்னவோ தேவர்களும் தேவிகளும் எனக்கு பிச்சை தரவில்லை! பிச்சை முயற்சி தோல்வியில் முடிந்தது!
நான் இப்படி பிச்சை எடுப்பதை பார்த்த எனது தமக்கையும் தமயனும், கொஞ்சம் பண உதவி செய்து YouTube Channel ஒன்றை தொடங்கிக்கொள் என்றனர். நானும் மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கினேன், YouTube என்பது சினிமா அல்ல! அது முழுவதும் வேறு ஒரு கதைக் களம் என்பதை உணவர்தற்குள் கொரோனா வந்தது! மிகுந்தவருத்தத்துடன் அந்த பணியை நாங்கள் கைவிட்டோம் காரணம் அது வெறும் மூன்று பேர் கொண்ட குழு... அவர்களுக்கு என்னால் இந்த காலகட்டத்தில் பணமாக உதவவும் முடியவில்லை. Channel ஹிட் ஆகவும் இல்லை. நான் மீண்டும் தோற்றேன்.
இப்படித் தொடர் தோல்விகளுக்கு மத்தியில் நான் ஏன் பகற்கனவு காணவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது! சினிமா எடுக்க சினிமா ஞானம் வேண்டாம், Contacts மட்டும் போதும் என்ற எண்ணம் எனக்கு புலப்பட்டது. Contacts இல்லாத நான் சினிமா எடுப்பதற்கான வாய்ப்பு அருகில் இல்லை என்பதை நன்றாக உணர்தேன். அந்தஉணர்வு என் 10 வருட காத்திருப்பை, தேடலை, நான் சந்தித்த அவமானங்களை சுக்குநூறாக்கியது… அதை மனம் ஏற்கவில்லைதான், ஆனால் ஆயிரம் காரணம் கூறினாலும் தோல்வி என்பது தோல்வியே! அதை ஏற்பதற்காகவே இந்த பதிவு!
ஆம், நான் தோற்றுவிட்டேன்!
எனக்கு பாலு சாரை விட திரைக்கதை எப்படி எழுத வேண்டும், சினிமா எப்படி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய சினிமா ஜாம்பவான்களுக்கு எனது மிகை இல்லா நன்றிகள்.
நான் சினிமா எடுக்க போவதில்லை என்பது எனது முடிவு அல்ல, நான் இனி யாசிக்கமாட்டேன் என்பதே எனதுமுடிவு! குறும்படங்களை முடிந்தவரை தொடர்ந்து எடுப்பேன்! குறும்படங்கள் என்பது எனது சுதந்திரம் நான் யாருக்காகவும் அதில் சமரசம் செய்ய தேவையில்லை! நான் அதை செய்துகொள்கிறேன்!
இது ஒரு emotional பதிவு அல்ல, இதில் உங்கள் sympathy-யும் empathy-யும் எனக்கு தேவையில்லை. இதுஒரு பதிவு - A Statement, நான் சினிமாவில் தோற்றுவிட்டேன் என்று கொண்டாடும் நல்லுள்ளங்களுக்கு அதை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு பதிவு, அவ்வளவே!
என்னை ஊக்குவித்த நல்லுள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் (இதில் நிறைய பேர் அடங்குவர்). ஆனால் இந்த பதிவை ஒரு சிலரே (மிகைத்து போனால் ஒரு நால்வர் அல்லது ஐவர்) படித்து like செய்வர் (நக்கல் சிரிப்புடன்)
2010-ன் முடிவு 2020-ல் முடிவிற்கு வருகின்றது... 2030-ல் சிலவற்றை ஞயாபகப்படுத்த இந்த பதிவு உதவும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இன்றும் அதே திமிருடனும் நன்றியுடனும்,
சிவராஜ் பரமேஸ்வரன்
31 December 2020